Thursday, February 23, 2012

ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி, பிப்.23-

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஓரினச்சேர்ககைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது:

ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். மேலும், இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானதாகும். இது இயற்கைக்கு முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் உள்ளது. எனவே, ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Tuesday, February 7, 2012

உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, பிரசாரத்தில் ஈடுபட்ட உதயகுமார் ஆதரவாளர்களை, காயல்பட்டினம் பொதுமக்கள், ஓட ஓட விரட்டி விட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, உதயகுமார் தலைமையிலான குழுவினர், தொடர் போராட்டம், பிரசாரம் நடத்தி வருகின்றனர்.அணு எதிர்ப்பு போராட்டத்திற்கு, தமிழக மக்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அணு எதிர்ப்பாளர்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. இதனால், அணு எதிர்ப்பாளர்கள் பல்வேறு பொது இடங்களுக்கு சென்று, எந்த அனுமதியுமின்றி பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில், அணு எதிர்ப்பாளர்கள் கூட்டமாக வந்தபோது, அங்கு வந்த அணு உலை ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு, போலீசார் மீது செருப்புகளை வீசினர். உதயகுமாருக்கு ஆங்காங்கே எதிர்ப்பு வலுப்பதால், அவர் மொட்டை போட்டு, பொது இடங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறார்.

இந்நிலையில், உதயகுமாருக்கு ஆதரவானவர்கள், நேற்று மாலை, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பஸ் நிலையம் முன் திரண்டு, அணு உலையை மூடக்கோரி கோஷமிட்டனர். பொதுமக்களிடம் அணு உலைக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு, துண்டுப் பிரசுரங்களை கொடுத்தனர்.இதுகுறித்து, தகவலறிந்த ஊர் மக்கள், பஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து, அணு உலை எதிர்ப்பாளர்களை ஓட ஓட விரட்டினர். மின் வெட்டால் தத்தளிக்கும் நிலையில், அணு உலையை மூட பிரசாரம் செய்கிறாயா என, அணு எதிர்ப்பாளர்கள் மீது, வசை மாறி பொழிந்தனர்.

இதுகுறித்து, அணு உலை எதிர்ப்பாளர்கள், ஆறுமுகனேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், பொதுமக்களே திரண்டு வந்து அணு உலை எதிர்ப்பாளர்களை விரட்டியதால், போலீசாரும் செய்வதறியாமல் திகைத்து, அணு எதிர்ப்பாளர்களை ஊருக்கு வெளியே அனுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உதயகுமாரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்"மொட்டை போட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை தேடித்தரும் உதயகுமாரை கைது செய்ய வேண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், உற்பத்தியை உடனே துவக்கி, அதில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் சார்பில், வரும் 13ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இது குறித்து, தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் தலைவர் அருள்தாஸ் கூறியதாவது:சென்னையைத் தவிர, தமிழகம் முழுவதும், ஏறக்குறைய எட்டு மணி நேர மின் தடை அமலில் உள்ளது. பனிக்காலத்தில் இந்த நிலை என்றால், வரும் கோடை காலத்தில், மக்கள் அனைத்து விதமான இன்னல்களையும் அனுபவிக்க உள்ளனர்.இந்த அவல நிலை மாறுவதற்கு, வரப்பிரசாதமாக கிடைத்த, கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க விடாமல், தேச விரோத கும்பல், உதயகுமார் தலைமையில் தடுத்துக் கொண்டிருக்கிறது. "மத்திய அரசு, எங்கள் மக்களை மொட்டை அடிக்கிறது. அதனால், நாங்கள் மொட்டை அடித்துக் கொள்கிறோம்' என, மொட்டை போட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை தேடித்தரும் உதயகுமாருக்கு, நாட்டின் குடிமகனாக இருக்கும் தகுதியே கிடையாது.

எனவே, இவரை நாடு கடத்த வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஒருவரால் தான், கூடங்குளம் அணு மின் நிலையத்தைச் செயல்பட வைக்க முடியும். எனவே, தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், உதயகுமார் மற்றும் அவரது தலைமையிலான தேச விரோத கும்பலை கைது செய்ய வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், உற்பத்தியை உடனே துவக்கி, அதில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு தர, மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 13ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அருள்தாஸ் தெரிவித்தார்.