Friday, March 2, 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்கக்கோரி சென்னையில் மாநாடு: அப்துல்கலாம் கலந்துகொள்கிறார்

சென்னை, மார்ச்.3-
 
அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்தியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி ஏழை நாடாக ஆக்குவதே கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டகாரர்களின் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் மக்களிடம் பேசவேண்டும் என்று போராட்டக்காரர்களின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு செல்லக்கூடாது.
 
கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்கவேண்டும் என்று போராடுவதால் எனக்கு அமெரிக்காவில் இருந்து போன் மூலம் மிரட்டல் வந்தது. போலீசார் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
 
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டுதான் போராடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் மீது மத்திய-மாநில அரசுகள் விசாரணை நடத்தவேண்டும்.
 
கூடங்குளம் அணுமின்உற்பத்தியை துவங்குவதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்கி மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை கருத்தரங்கம்-மாநாடு நடத்த உள்ளோம்.
 
இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள், அனைத்து ஆதரவு கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் தொழில் முதலீட்டாளர்கள் சங்க தலைவர்கள், வியாபார சங்க தலைவர்கள், விஞ்ஞானிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
 
இவ்வாறு ஆர்.சந்திரன் ஜெயபால் கூறினார்.
 
பேட்டியின் போது அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி அமைப்பாளர்கள் மு.கிருஷ்ணபறையனார், ஆர்.காந்தையா, பி.இளங்கோ, மயிலை சுகுமாரன், பொதுச்செயலாளர் சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment