Wednesday, March 9, 2011

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, மார்ச் 9-
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க கோரி திண்டிவனத்தை சேர்ந்த குருஅப்பாசாமி, மக்கள் கட்சியைப் சேர்ந்த சிவ இளங்கோ ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரது பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் தேர்தல் தேதியை மாற்றக் கோரி வலியுறுத்தப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.ராஜகோபாலன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தலை தள்ளி வைத்தால் பிரச்சினை ஏற்படும். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதில் கோர்ட்டு தலையிட இயலாது என்றார்.
தேர்தலை தள்ளி வைக்க கோரும் இரண்டு ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது:-
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேசன் உள்பட பள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே சட்டசபை தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்பதில் சென்னை ஐகோர்ட்டு தலையிட விரும்பவில்லை. என்றாலும் தேர்வு எழுதும் பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி 4 நிபந்தனைகளை இந்த கோர்ட்டு விதிக்கிறது.
1. தற்போது நடந்து வரும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள பள்ளி ஆசிரியர்களை மற்றும் பள்ளி பணியாட்களை எந்த காரணத்தைக் கொண்டும் தேர்தல் பணிகளுக்கோ அல்லது தேர்தல் தொடர்பான பயிற்சிகளுக்கோ தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது. தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று முடியும் வரை பள்ளி ஆசிரியர்கள், பணியாட்களை தேர்தல் பணி என்ற பெயரில் தொல்லை செய்யக் கூடாது.
2. பள்ளிக் கூட வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.
3. ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று வரும் அரசு வாகனங்களையோ அல்லது கல்வி நிறுவனங்களின் வாகனங்களையோ தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
4. தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு அமைதியான சூழ்நிலை அவசியம். எனவே தேர்வு நடக்கும் மையங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு எந்த அரசியல் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. தேர்வு மையம் பகுதிகளில் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணிகளிலும் ஈடுபடக் கூடாது.
இந்த 4 நிபந்தனைகளையும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் எம்.ஒய். இக்பால், டி.எஸ். சிவஞானம், தீர்ப்பளித்தனர்.

நன்றி : மாலைமலர்

No comments:

Post a Comment