ஒரு எஸ்.எம்.எஸ் ஸில் உடைந்த வாழ்க்கை
எம்.பி.ஏ. படித்த அழகான இளம் பெண் அவர். பெற்றோர் ஏற்பாட்டின்படி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவருடன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. முதலிரவில், புது மனைவிக்காக காந்திருந்த மாப்பிள்ளையைத் தேடி முதலில் வந்தது ஒரு எஸ்.எம்.எஸ்...
'முதலிரவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
- இப்படிக்கு, உங்கள் மனைவியின் முதல் கணவர்’.ரொம்பவே அதிர்ந்து போனவருக்குக்...
ரொம்பவே அதிர்ந்து போனவருக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. உள்ளே நுழைந்த புதுமனைவியை கடுகடுவென்றே எதிர்நோக்கியவர், ''உனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா..?'' என்று நேரடியாகவே கேட்டார்.
''என்ன இப்படி கேட்கறீங்க... அபாண்டமா பேசறீங்க?'' என்று படபடத்த அந்தப் பெண்ணின் கண்களில் பதற்றத்தைவிட, கள்ளத்தனம் இருப்பதாகப் பட்டது மாப்பிள்ளைக்கு. முதலிரவு அறையிலிருந்து ஹாலுக்கு மாறியது பஞ்சாயத்து.
''எங்க பொண்ணைப் பிடிக்காத யாரோ, இப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்காங்க'' என்று அழுகையும் ஆத்திரமுமாகக் குமுறினர் பெண்ணின் பெற்றோர்.
''எஸ்.எம்.எஸ்-ஸுக்காக ஒரு பெண்ணோட வாழ்க்கையை பாழாக்கிடாதடா...'' என்று மாப்பிள்ளையின் பெற்றோரும் பரிந்து பேசினர்.
''விசாரிப்போம். பொய்யா இருந்தா, கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டு இந்தப் பெண்ணை ஏத்துக்கறேன்!'' என்றார் உறுதியாக மாப்பிள்ளை.
''எஸ்.எம்.எஸ். அனுப்பினது யாருனு கண்டுபிடிச்சுட்டா, பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சுடும்'' என்றபடி பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தனர் மாப்பிள்ளையின் பெற்றோர். எஸ்.எம்.எஸ். அனுப்பிய மொபைல் நம்பரைத் தொடர்பு கொண்டபோது, எப்போதும் 'ஸ்விச்டு ஆஃப்’! அதன் முகவரியைக் கண்டறிந்து தேடிச் சென்றபோது, அங்கே இருந்தது... இடிந்துபோன ஒரு வீடு!
ஏதாவது ஒரு சமூக வலைதளத்தில் சிக்கக்கூடும் என்று அனுமானித்து... மொபைல் எண் பெறுவதற்காக கொடுக்கப்பட்டிருந்த முகவரியில் இருந்த பெயரை வைத்து... ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று சலித்துத் தேடினோம். ஆர்குட் தளத்தில் சிக்கியது அந்த மொபைல் எண்ணுக்குரிய நபரின் ஒரு இ-மெயில் ஐ.டி.
ஒரு பெண்ணின் பெயரில், 'மை போட்டோஸ்!’ என்று அந்த ஐ.டி-க்கு மெயில் அனுப்பினோம். அதனுடன் ரகசிய மென்பொருள் (spy software) இணைக்கப்பட்டிருந்தது. அந்த மெயிலைத் திறந்ததும் நாங்கள் அனுப்பிய ரகசிய மென்பொருள், அந்த கம்ப்யூட்டரில் ஊடுருவியது. அதன் மூலமாக அந்தக் கம்ப்யூட்டரை அலசியபோது, அதிர்ச்சியாகிவிட்டோம். அந்த புதுமணப் பெண்ணும், ஒரு ஆணும் இணைந்து எடுத்த புகைப்படங்களுடன், அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்ட சான்றிதழும் 'ஸ்கேன்’ செய்யப்பட்டு 'சேவ்’ செய்யப்படிருந்தது.
மணமகனின் பெற்றோரிடம், 'ஆம்... அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவர். எஸ்.எம்.எஸ். அனுப்பியவன் அவரின் கணவன்’ என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தோம். பெண்ணின் பெற்றோரிடம் அதைக் காட்ட, கலங்கிவிட்டனர். தன் முகமூடி கலைந்ததால் என்ன நடந்தது என்பதை தானே விளக்கினார் புதுப்பெண்.
அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த ஒருவரை காதலித்திருக்கிறார். இரு வீட்டிலுமே சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தவர்கள், தமிழ் சினிமா ஒன்று தந்த ஃபார்முலாவை பின்பற்றியிருக்கிறார்கள். அதாவது, ''ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு, உன் வீட்டுல நீ இரு; என் வீட்டுல நான் இருக்கேன். நேரம் வரும்போது சொல்லிக்கலாம். அதுவரைக்கும் ஃப்ரெண்ட்ஸா மட்டுமே இருப்போம்'' என்று!
அதற்குப் பின்னான நாட்களில்... அவன், பல பெண்களிடமும் தொடர்பில் இருப்பவன் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே சண்டைகள் ஆரம்பமாகி, ''நாம பிரிஞ்டலாம்...'' என்று பரஸ்பரம் பேசிப் பிரிந்திருக்கிறார்கள். வேலையையும் வேறு கம்பெனிக்கு மாற்றிக் கொண்டுவிட்டார் இந்தப் பெண். வேறு ஒருவருக்கும் கழுத்தை நீட்டிவிட்டார். ஆனால், எஸ்.எம்.எஸ். அனுப்பி பழிதீர்த்துக் கொண்டுவிட்டான் முதல் கணவன்!
தற்போது புதுமாப்பிள்ளை விவாகரத்து பெற்றுவிட, முதல் (காதல்) கணவனிடம் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண் பரிதாபமாக!
பிரபல சினிமா நடிகர் ஒருவரின் சொந்தக் கதையை நினைவு படுத்துகிறதல்லவா இந்த வழக்கு. இதுபோன்ற ரகசிய திருமணங்கள் இப்போது பெருகிக் கொண்டிருக்கின்றன. ஊரறிய நடக்கும் திருமணங்களே சமயங்களில், வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் இன்றைய காலத்தில், சினிமாவைப் பார்த்துவிட்டு, இப்படி ரகசிய தாலி கட்டிக்கொள்வது... சின்னப்பிள்ளைத்தனம் என்பதைத் தவிர வேறில்லை! பல்வேறு காரணங்களால் பிரிய நேரிடும்போது... மீளவே முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டு விடுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம் இளசுகளே!
'ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்கள், இன்றைக்கு படுபரபரப்பாக பேசப்படுகின்றன. காலையில் காபி குடித்ததில் ஆரம்பித்து, மாலையில் கணவருடன் எங்கெல்லாம் சென்று வந்தோம் என்பது வரையிலான அந்தரங்க தகவல்களையும்கூட அந்த இணைய தளங்கள் மூலம் ஊருக்கே பந்தி வைக்கும் கலாசாரம் பரவி வருகிறது. அப்படி பந்தி வைத்த அந்த இளம் பெண் பட்டபாடு..?
Thanks - Vikatan
&
Sirkali Sithappu
No comments:
Post a Comment